Sunday, December 30, 2018

நேந்துக்குறேன்


நேந்துக்குறேன்
பள்ளிக்கூடம் போன பய 
பகல் முடிஞ்சும் திரும்பலையே! 
வெளக்குக் கூட வச்சாச்சு 
வீடு வந்து சேரலையே! 

பள்ளிக்கூடம் பூட்டிக்கெடக்கு! 
பெரிய பூட்டு மாட்டியிருக்கு! 
எட்டிப் பாக்க வழியில்லாம 
எல்லா சன்னலும் சாத்தியிருக்கு!

கொல்லப் பக்கம் போனாக்கூட 
சொல்லாமப் போனதில்ல! 
புள்ள வந்து சேராம 
என் உசுரு என்னதில்ல! 

ஆடு மேய்க்கப் போன கூட்டம் 
அத்தனையும் வந்துருச்சே! 
காட,காக்கா,குருவியெல்லாம் 
கூடு வந்து சேந்துருச்சே! 

ஏழு மணி தாண்டிருச்சே! 
எல்லாப் பக்கமும் இருட்டிருச்சே! 
எட்டு வயசுச் சின்னப் பய 
எங்க போனான் தெரியலையே! 

தகப்பனில்லாப் பிள்ளையின்னு 
தனியா எங்கயும் விட்டதில்ல! 
தப்பு கிப்புச் செஞ்சாலும் 
தவறிக் கூடத் தொட்டதில்ல! 

அங்க இங்க நிக்கமாட்டான்! 
அதிர்ந்துகூடப் பேசமாட்டான்! 
அத்த வீடு அடுத்த தெரு 
அங்க கூட போகமாட்டான்! 

சந்து பொந்து ஒன்னு விடாம 
சாதி சனம் தேடுறாக! 
ஆளுக்கொரு கதயச் சொல்லி 
அடி வயித்தக் கலக்குறாக! 

வாத்தியாரக் கேட்டாச்சு! 
வரப்புப் பக்கம் பாத்தாச்சு! 
வாழத்தோப்பு வரைக்கும் கூட 
ஆளனுப்பித் தேடியாச்சு! 

பொத்திப் பொத்தி வளத்த பய 
போன எடம் தெரியலையே! 
சுத்திச் சுத்தித் தேடியாச்சு 
புத்திக்கொன்னும் புரியலையே! 

பாவி மகன் கெடச்சான்னா 
பழனி மலைக்கு நடந்து வர்றேன்! 
முடிய வழிச்சு காணிக்கையா 
முருகனுக்கு செலுத்திடுறேன்! 

கருப்புசாமி கோவிலுக்கு 
கிடா வெட்ட நேந்துக்குறேன்! 
பொன்னியம்மன் கோவிலுக்கு 
பொங்க வச்சு பூச தர்றேன்! 

படக்குன்னு முழிப்பு தட்ட 
பதறியடிச்சு பாக்குறேன்! 
பக்கத்துல தூங்கிக் கெடந்த 
பயல எழுப்பித் தூக்குறேன்! 

கண்டதெல்லாம் கனவுதான்னு 
புரிஞ்சுகிட்டு சிரிக்கிறேன்! 
வேர்வையெல்லாம் முந்தானைல 
வேக வேகமா தொடைக்குறேன்! 

முழிப்பு மட்டும் வரலன்னா 
என் மூச்சுக்குழி அடச்சிருக்கும்! 
நெசமுன்னு நெனச்சுக்கிட்டு 
என் நெஞ்சுக்குழி வெடிச்சிருக்கும்! 

நேத்திக்கடன் எல்லாத்தையும் 
நெசமாவே தீத்திடனும்! 
மறுபடி இந்தக் கனவு வராம 
மாரியாத்தா காத்திடணும்!

No comments:

Post a Comment

Comments are always welcome