Sunday, December 30, 2018

தயக்கம் தவிர்ப்பாய் தமிழா

தயக்கம் தவிர்ப்பாய் தமிழா


சல்லிக்கட்டுத் தடையுடைக்க 
துள்ளியெழுந்த தமிழா 
அல்லல்படும் மீனவர்க்காக 
அணிதிரண்டாலென்ன தவறா? 

குமுறும் அவர்கள் குரலைக் கேட்டும் 
உருகவில்லையா இதயம்? 
குமரி என்பது வெளிநாடல்ல 
உணர்த்தவேண்டுமா இதையும்? 

ஆடிக்காற்றே அதிகம் வீசினால் 
அச்சமேற்படும் நமக்கு! 
ஓகிப் புயலின் வேகமென்பது 
அதைப்போல் அறுபது மடங்கு! 

விரும்பிய மீன்கள் கடையில் இல்லையேல் 
விரக்தியடைகிறோம் இங்கே! 
திரும்பிய திசைகள் எல்லாம் கடலில் 
மீனவர் பிணங்கள் அங்கே! 

வீட்டைச் சூழும் மழைநீருக்கே 
மீட்புப் படை கோரும் நமக்கு 
மிரட்டும் அலையின் நடுவே தொலைந்த 
மீனவர்கள் விதிவிலக்கு! 

தலைநகரில் ஒரு கொலை நடந்தாலும் 
சகல ஊடகமும் அதிரும்! - அங்கோ 
கரைதிரும்பாத மீனவர் கணக்கு 
ஐநூறுக்கும் அதிகம்! 

மீண்டு வந்தவர் கதைகள் கேட்டால் 
ஈரக் குலைகளும் நடுங்கும்! 
தீர்வுகள் இதற்கு இல்லாதுபோனால் - இனி 
மீன்பிடித் தொழிலே முடங்கும்! 

கண்முன் உறவுகள் உயிர்விடக் காண்பது 
காணச் சகிக்கா காட்சி! - அங்கே 
அழுகி மிதக்கும் சடலங்கள் எல்லாம் 
இந்த அவல ஆட்சியின் சாட்சி! 

சுயநல நரிகளின் கைகளில் 
ஆட்சிப் பொறுப்புகள் இருக்கும் வரைக்கும் 
கடலோரத்து காவல்படைகள் 
புடலங்காய்தான் பறிக்கும்! 

கேடுகெட்டவர் ஆட்சி புரிந்தால் 
வேறது இங்கே நடக்கும்? 
பேரிடர் மீட்பின் அர்த்தமதனை 
கேரளம் நமக்கு விளக்கும்! 

நித்திரை கலைந்தெழு தமிழினமே இங்கு 
நிகழ்வது மிகப்பெரும் அவலம்! 
மீனவர்க்காக குரல் கொடுக்க 
மீண்டும் இது ஒரு தருணம்!

No comments:

Post a Comment

Comments are always welcome