Monday, December 12, 2022

பொன் வண்டு

 

இப்போதும் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
பொன் வண்டுகளைப் பற்றிய
என் பழைய நினைவுகளை!
பஞ்சவர்ணக் கிளிகளோ,
தோகை மயில்களோ அல்லது மின்மினிப் பூச்சிகளோ தந்த பிரமிப்பைவிட
எவ்வகையிலும் குறைந்ததன்று
பொன்வண்டுகள் என்னுள் ஏற்படுத்திய ஆச்சரியங்கள்!
நகர வாழ்க்கை நோக்கி
நகரத் தொடங்கியபின்
பொன் வண்டுகளை காணும் வாய்ப்பு
பொய்யாகிப் போனது!
இதுவே நிகழப்போகிறது என
இளம்பருவத்திலேயே உணர்ந்திருந்தால்
இன்னும் சற்று அதிகமாகவே இரசித்திருப்பேன்
மின்னித் திரிந்த அந்த வண்டுகளை!
கொடிக்காய் மரங்களில் மிடுக்காய் ஊறுமதை பிடிக்கும் வித்தை
பிடிபட்டதில்லை எளிதில் பலருக்கு அக்காலத்தில்.
பொன் வண்டுகள் வைத்திருக்கும்
அண்ணன் மார்களை மன்னர்களாகப் பார்த்த காலமொன்றிருந்தது! பெருமிதம் வழியும் முகத்தோடு தெருவில் அவர்கள் நடக்கும்போது ஏக்கப் பார்வை பார்த்த ஏராளமானவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்!
பொன் வண்டுகளை அடைத்துவைக்க அண்ணன்மார்கள் பின்பற்றும் யுத்தி பொன் வண்டுகளைக் காட்டிலும்
சுவாரசியமானது!
சிகரெட் அட்டைகள் சிலவற்றை சேர்த்து பக்கவாட்டில் அடுக்கி
பாங்காய் இணைத்து உருளை வடிவில் ஒரு அறை செய்து உள்ளே விட்டுவிடுவார்கள்
அந்த பிடிபட்ட வண்டுகளை!
கொடிக்காய் மரத்தில்
பிடிபடுவதாலோ என்னவோ
கொடிக்காய் இலைகள் மட்டுமே
அவற்றிர்க்குப் பிடித்தமான உணவு
என பிடிவாதமாக நம்பினார்கள்
அண்ணன்மார்கள்!
அதற்காக அவ்வட்டைப் பெட்டியின்
அடித்தளத்தில் கொடிக்காய் இலைகளைக் கொட்டி வைத்திருப்பார்கள்.
எண்பதுகளின் கிராமப்புற சிறுவர்களுக்கு பொன் வண்டுகளைப் பற்றி சொல்ல வேண்டியிருக்காது. அறியாத மற்றவர்களுக்காக அப்பொன் வண்டுகளை வர்ணிக்காது போனால்
பொதுமன்னிப்பென்பது கிட்டாதெனக்கு.
சாந்து நிறத்தில் சலவைக் கல் போன்றே வழவழப்பானது அதன் உடல்! மின்னும் பச்சை நிறத்தில்
கண்ணைப் பறிக்கும்படி இருக்கும் அதன் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகள்.
பொன் வண்டுகளைப் பற்றி என்னிடம் அதிகமாகக் கதை சொல்வது சுப்பிரமணியும் திரவியமும்தான்.
பொன் வண்டு பற்றி அவர்கள் சொன்ன பல விசயங்களில் முக்கியமானதாக எனக்குப் பட்டது நீலவேணிக்கும் (எட்டாம் வகுப்பு "இ" பிரிவு) பொன் வண்டு ரொம்பப் பிடிக்கும் என்பதுதான்.
நீலவேணிக்காகவே "இ" பிரிவை இளித்தபடி எட்டிப் பார்க்கும் பலரில் நான் இல்லையென்றபோதும் நீலவேணி போட்டு வரும் ரெட்டை ஜடையும், தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் பழக்கமும், ஒற்றைக் கையால் வாய்மூடிச் சிரிக்கும் அழகும் மிகவும் பிடிக்கும்.
நீலவேணியிடம் நான்கைந்து பொன்வண்டுகள் இருந்ததாகவும் யார் பொன் வண்டு வைத்திருந்தாலும் அவர்களிடம் நட்பாகப் பேசி பொன் வண்டு பற்றி விசாரிக்கும் என்றும் திரவியம் பயல் கொளுத்திப் போட்டிருந்தான்.
ஆக பொன் வண்டுகளின் மீதான ஆசையை அதிகப்படுத்திய காரணிகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.
கனகராஜ் அண்ணனுக்கு
இவ்வண்டு கடித்து
துண்டாய் போனது விரல்
என சுப்பிரமணி பலமுறை
என்னிடம் சொல்லி
பயமுறுத்தி வைத்திருந்தான்!
அதன் தலைக்கும் உடலுக்கும் இடைப்பட்ட பிளவில் கை வைத்தால் வெட்டிவிடுமாம்.
பழகினால் ஒன்றும் செய்யாது என அவனே
சமாதானமும் சொல்லி வைப்பான்!
பின்னொருநாளில் இளங்கோ தாத்தாவிடம் இதுபற்றி கேட்டபோது
"அது பச்சப்புள்ள மாதிரிடா, கடிக்காது" என்று பொடி போட்டுக்கொண்டே பொறுப்பாக பதில் சொன்னார்.
அதன்பிறகு சற்று தைரியம் வரவே
எப்படியாவது அதைத் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் எனத் தொந்தரவு செய்யத் தொடங்கியது மனது!
மதி அண்ணனிடம் புதிதாகப் பிடிபட்ட பொன் வண்டு இருப்பதாக சுப்பிரமணிப் பயல் சொல்லியிருந்தான்.
ஐஸ் கம்பெனியில் வேலை செய்யும் மதி அண்ணன் முத்து சைக்கிள் கடையில் மாலை நேரங்களில் மணிக்கணக்காய் அமர்ந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.
அன்று சற்று முன்னமே சென்று
அவருக்காக காத்திருந்து அவர் வந்ததும் வராததுமாக கேட்டுவிட்டேன் ஒரு வழியாக.
"நாளைக்கு வாடா, உன் கையிலயே அத நடக்க விடுறேன்" என்றார்.
அன்றிரவு அவ்வளவாகத் தூக்கம் வரவில்லை. இடை இடையே வந்த உறக்கத்தின் நடுவில் பொன் வண்டு கையில் ஊறுவதாகவே கனவு வந்துகொண்டிருந்தது.
அடுத்தநாள் மூன்று மூன்றரைக்கெல்லாம் முத்து அண்ணன் சைக்கிள் கடையில் போய் நின்றுவிட்டேன். "டே அவன் அஞ்சு மணிக்குமேலதான்டா வருவான்" என்றார் முத்து அண்ணன்.
"வருவார்ல அது போதும்" என்று திருப்திப்பட்டுக்கொண்டது மனது.
பாழாய்போன மதி அண்ணன் அன்றைக்கு என்று ஆறு மணிக்குத்தான் வந்தார்.
என்னைப் பார்த்ததும் தலையில் கைவைத்தபடி "அய்யோ மறந்துட்டன்டா" என்றார்.
ஏமாற்றம், அழுகை, கோபம் மூன்றும் ஒரே நேரத்தில் வந்து அழுத்தியது. விருட்டென திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.
"நாளைக்கு கட்டாயம் எடுத்து வர்றேன்டா" மதி அண்ணன் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாதபடி நடையின் வேகத்தைக் கூட்டினேன்.
வீட்டிற்கு வரும் வழியில் சர்ச்சிற்கு பின்னால் வளர்ந்திருந்த கொடிக்காய் மரத்தடியில் வந்து அமர்ந்துவிட்டேன்.
எப்படியாவது பொன்வண்டை கையில் வாங்கிப் பார்த்து அதை சுப்பிரமணிப் பயலிடம் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது தள்ளிப்போனதை தாங்க இயலவில்லை.
ஏனென்றால் சுப்பிரமணி "மதி அண்ணன் யாருக்கும் பொன் வண்டத் தராது. நான் கேட்டப்பவே தரேன்னு சொல்லி தரல" என்று வேறு சொல்லியிருந்தான். பிடிபட்ட பொன்வண்டுகளை இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்துவிட்டு மரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம்.
நேரமாக நேரமாக ஏமாற்ற உணர்வும் பொன் வண்டைத் தொட்டு விளையாடும் ஆசையும் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் நாமே ஏன் பொன் வண்டைத் தேடிப் பிடிக்கக்கூடாது என்று யோசனை வரத்தொடங்கியது. அதுவும் இந்த மரத்திலேயே தேடினால் என்ன?
எப்படியாவது வீட்டிற்குப் போவதற்குள் ஒரு பொன் வண்டையாவது பிடித்துப் போய் திரவியத்திடம் பெருமையாக காட்டிவிடவேண்டும்.
திரவியத்திற்குத் தெரிந்தால் அவன் சித்தி மகள் பாண்டியம்மாள் மூலம் நீலவேணிக்கு கடத்தப்பட்டுவிடும் இந்தச் செய்தி. பாண்டியம்மாளும் நீலவேணியும் நெருங்கிய தோழிகள்.
பரபரவெனத் தேடத் தொடங்கினேன். மரத்தின் சிறு பொந்துகளில் தொடங்கி மரக்கிளைகளின் நுனிவரை பார்வையால் அலசுகிறேன். எப்படியாவது ஒன்று தட்டுப்பட்டுவிடாதா என்கிற ஏக்கம் எனது தேடலை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது.
அரைமணிநேரத் தேடல் தாண்டியும் அகப்படவில்லை என் கண்களுக்கு எதுவும். மரத்தின் ஒரு பகுதியை உலுக்கியும் பார்த்தாகிவிட்டது. பலனேதுமில்லை. விரக்தி என்னை நிரப்பிக்கொண்டது.
வீட்டில் தேடுவார்கள் என ஞாபகம் வரவே எனது தேடலை நிறுத்திவிட்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.
வழியில்தான் நீலவேணி வீடு.
வழக்கமாக நீலவேணி வீட்டை நான் கடக்கும்போது அதுவாகவே வேகத்தைக் குறைத்துக்கொள்வதுண்டு என் கால்கள்.
சில சமயங்களில் நீலவேணி திண்ணையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும் . எனது நடமாட்டத்தைக் காட்டிக்கொள்ள ஏதாவது ஒரு சினிமா பாட்டை சத்தமாகப் பாடியபடி நடப்பது வழக்கம். அப்படிப் பாடும்போது என்னையும் அறியாமல் தலைமுடியைக் கோதும் வழக்கமும் இருந்தது.
அன்றைக்கு நீலவேணி தோழிகளுடன் வீட்டு வாசலில் பாண்டி ஆடிக்கொண்டிருந்தது. எப்போதும் உடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பாண்டியம்மாளைக் காணவில்லை.
பொன்வண்டு கிடைக்காத வெறுப்பில் நீலவேணியின் முகம் பார்க்கத் தயங்கியது மனம். லேசாக அழுகை வேறு வந்தது. தலை குனிந்தபடியே வேகமாகக் கடந்துவிடும் எண்ணத்தில் விரைவாக நடக்கிறேன்.
சரியாக அவர்களைக் கடந்து நான்கடி தாண்டியிருப்பேன்.
"டேய் பார்த்தி..."
நெருக்கமானவர்கள் மட்டுமே எனை அப்படி அழைப்பதுண்டு.
சத்தம் வந்தவுடன் தானாக நின்றுவிட்டன கால்கள். யாராக இருக்கும்? நீலவேணியா?
இதுவரை நாங்களிருவரும் பேசிக்கொண்டதில்லை. என் பெயர் அதுக்குத் தெரியுமா என்று யோசித்ததில்லை.
"இருங்க பிள்ளைகளா வந்துடறேன்"
என்ற குரலைத் தொடர்ந்து ஒரு ஜோடிக் கொலுசொலி எனை நோக்கி ஓடிவரும் சத்தம்.
திரும்பிப் பார்க்கிறேன்.
நீலவேணியேதான்.
அடிப்பாவி நான் மகிழ்வான மனநிலையில் எத்தனையோ முறை உனைக் கடந்தபோது பேசியிருக்கக்கூடாதா?..
அருகில் வந்து அழகாக மூச்சிறைக்கிறாள்.
"நீ பொன்வண்டு வளக்குறியா?"
பூச்செண்டு ஒன்று பொன்வண்டைப் பற்றி விசாரிக்கிறது..
இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லும் ஆனந்தத்திற்காகத்தானே ஆசைப்பட்டேன்?
இல்லை என்று தலையாட்டி தலை குனிகிறேன்.
"டே யார்ட்ட கத விடுற? உன் தோள்மேலதான உக்காந்திருக்கு" இனிமையான குரலில் இருமடங்கு ஆச்சரியம்!
தலை திருப்பித் தோள்களில் தேடுகிறேன்.
வலதுபுறத் தோளில் அழகாக அமர்ந்திருந்தது அந்தப் பொன்வண்டு. அவ்வளவு பெரிய பொன்வண்டை அதுவரை நான் பார்த்ததில்லை.
"ஏ ரொம்ப அழகா இருக்குப்பா. இன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாளைக்குத் தரவா?"
ஏக்கமாய் கேட்டது அந்த எட்டாம் வகுப்புப் பொன்வண்டு.
எனக்கு இன்னமும் ஆச்சரியம் விலகவில்லை. எப்படிச் சாத்தியமானது இது?
சர்ச் வளாக கொடிக்காய் மர்த்தடியில் அமர்ந்திருந்தபோது சட்டையில் வந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் அந்த சமத்துக் குட்டி.
நாளைக்கே சர்ச்சில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட வேண்டும் என எகிறிக் குதித்தது மனது.
அதற்கு மேல் அந்த இடத்தில் யோசனையில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
"எடுத்துக்கோ நீலவேணி. பொறுமையா தா போதும்" பெருந்தன்மை பெருக்கெடுத்தது எனக்கு.
தன் கையாலேயே என் தோள்தொட்டு பொன்வண்டை எடுத்துக்கொண்டது நீலவேணி.
பாண்டி விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் நீலவேணியைச் சூழ்ந்துகொள்ள
திரும்பி நடையைத் தொடர்கிறேன் நான்!
ததும்பி மிதந்துகொண்டிருந்தது மனது!
நீலவேணியின் ஸ்பரிசம் பட்ட தோளில்
நீண்டு வளரத் தொடங்கியிருந்தது சிறகொன்று!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome