Monday, December 12, 2022

பழகிருச்சு தம்பி


 அவ்வப்போது நான் செல்ல நேரும்

ஆறு தளங்கள் கொண்ட
வணிக வளாகம் அது!
அதன் மின்தூக்கியை
இயக்கும் பொறுப்பில்
மீசை நரைத்த அந்த பெரியவரை
அநேக நேரங்களில் காண்கிறேன்!
தளங்களைக் குறிக்கும் பொத்தான்களின் கீழமைந்த தாழ்வான ஒரு முக்காலிதான் அவருக்கான இடம்!
கதவு திறந்து மூடு்ம் இடைவெளியில்
புகுந்து வரும் காற்று மட்டுமே
புதுப்பித்துக் கொண்டிருந்தது
அவரையும் அவ்வறையையும்!
சாளரமற்ற ஒடுங்கிய அறையில்
சலனமற்ற முகத்துடன்
போவோர் வருவோருக்காக பொத்தான்களை அழுத்துவதொன்றே
அவரது பணி!
தகரக் கதவுகள் திறந்து மூடும்
சத்தம் மட்டுமே
அவரது தனிமையின் இடைவெளிகளைத் தவணை முறையில் நிரப்பிக்கொண்டிருந்தன!
நடுநடுவே தலைகாட்டும் மனிதர்களின் நடமாட்டம்
தான் நரகத்தில் இல்லையெனும்
நம்பிக்கையைத்
தந்திருக்கக்கூடும் அவருக்கு!
மூச்சை முட்டும் சிறிய அறை
இயந்திரம் கொண்டியங்கும் அந்த இரும்புச் சிறை!
காலை முதல் மாலை வரை
மேலும் கீழுமாய் அதில் உழலும் நிலை!
எண்களை அவர் அழுத்தும் விதத்தில்
அவரது மன அழுத்தத்தின் தீவிரத்தை
மதிப்பீடு செய்ய முடிந்தது!
ஆயினும் கூட
எவ்வளவு நெரிசலிலும் அவர் எரிச்சலடைந்து நான் பார்த்ததாக
எப்போதும் நினைவில்லை எனக்கு!
உங்களில் சிலரைப் போலவே
மேலோட்டப் பார்வையில் இது
கடினமற்ற பணியாகத் தோன்றிய எனக்கு
அம்முக்காலியில் எனை இருத்திவைத்துக் கற்பனை செய்ததில்
மூன்றே நிமிடங்களில்
முகம் வியர்த்துப்போனது!
அளவு கடந்த பொறுமை இருந்தாலொழிய
அவ்வளவு எளிதன்று இப்பணி என்பதை ஆழமாக உணரமுடிந்தது!
நானும் அவரும் மட்டும்
பயணப்பட்ட நண்பகல் தருணமொன்றில்
மெதுவாகக் கேட்டேன் அவரிடம்
"ஐயா இது கடினமாக இல்லையா?"
பற்கள் தெரியாமல் சிரித்து
ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்
"பழகிருச்சு தம்பி"
அந்த விரக்திச் சிரிப்பிலிருந்து
விழுந்து சிதறிக்கொண்டிருந்தது
அவர் விளக்க விரும்பாத சில விசும்பல்கள்!
இப்படித்தான் பழகிக்கொண்டிருக்கிறது
பலருக்கும் இந்த வாழ்க்கை
பாரங்களுக்கும் பாதிப்புகளுக்கும்
மத்தியில்
வேறேதும் வழிகளின்றி!
இப்போதெல்லாம்
சிறு தடங்கல்களிலும்
சில நொடி தாமதங்களிலும்
பொறுமையிழந்து எரிச்சலுறும்போது
நினைவில் கொள்ளத் தவறுவதில்லை
அம்மின்தூக்கியையும்
அம்மனிதரின் புன்சிரிப்பையும்!
அதனினும் முக்கியமாய்
"பழகிருச்சு தம்பி" என்ற அந்த
பக்குவப்பட்ட வார்த்தைகளையும்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome