Monday, December 12, 2022

எரிமலையின் எழுதுகோல்

 

அது சூரிய விரல்கள்
சுமந்த பேனா!
காரிருள் விலக்க
கவிழ்ந்த பேனா!
அது ஆரியத் திமிரை
அறுத்த பேனா!
வீரிய விதைகள்
விதைத்த பேனா!
அது கூரிய வாளாய்
சுழன்ற பேனா!
சீறிய பகையை
சிதைத்த பேனா!
அது ஊறிய பழமை
உடைத்த பேனா!
காரியத் தடைகள்
கடந்த பேனா!
அது மூடி கழற்றும்போதெல்லாம்
சிலர் முகமூடிகளையும் கழற்றிய பேனா!
வாடி பலர் நின்றபோதெல்லாம்
அவர் வாட்டங்களை அகற்றிய பேனா!
அது முக்கியக் கோப்புகளை
முத்தமிட்ட போதெல்லாம்
சிக்கல் சிலவற்றிலிருந்து
மக்களை விடுவித்த பேனா!
அது திறந்தபோதே
தீப்பொறி பறந்த பேனா!
மறந்தும்கூட
எவருக்கும் மண்டியிடாத பேனா!
அது மார்க்சிய மையூற்றி
பாகுபாடுகளுக்கு பாலூற்றிய பேனா!
அது முட்டாள்தனங்கள் சிலவற்றிற்கு
முற்றுப்புள்ளி வரைந்த பேனா!
தொட்டாலே தீட்டு என்றவனின்
பொட்டிலேயே அறைந்த பேனா!
அது "மு.கருணாநிதி" என்ற கையெழுத்தால்
முடங்கிக் கிடந்தவனை
கைதூக்கிவிட்ட பேனா!
முடியாது என்றிருந்தவனிடம்
முன்னேற்றத்தை முன்னிறுத்திய பேனா!
அது இயங்கியவரையில்
இயந்திரத் துப்பாக்கியாக இருந்ததால்தான்
இன்று சிலை என்றதற்கே
குலை நடுங்குகிறது சிலருக்கு!
சரித்திரம் படைத்த அந்த பேனாவிற்கு
சத்தியமாய் அமைப்போம்
ஒரு சிலை!
அதன்முன்
சற்றே நிமிரட்டும்
சரிந்து கிடக்கும்
பொருளாதார நிலை!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome