Saturday, September 18, 2021

செயல்வீரா

ஈட்டியின் முனையை தீட்டிய கூர்மை!

இமயத்தின் அளவு இதயத்தில் நேர்மை!

இடியொன்றின் இயற்பெயர் ஈ.வெ.ரா!

அட இவனும் நெருப்பும் இருவேறா? 


ஊக்கமும் உழைப்பும் இவனது உடைமை!

உலகினில் ஏது இவனுக்கு உவமை?

போற்றுகிறோம் உனை போர்வீரா! - நீ

செந்தமிழ் நாட்டின் சேகுவேரா! 


சமரசமில்லா சமத்துவக் கடமை!

சாதிக்கு எதிராய் சமரிட்ட திறமை!

மடமையை எதிர்த்த மாவீரா!

அட வேங்கையும் நீயும் வெவ்வேறா? 


எதிரிகள்கூட வியந்திடும் எளிமை!

எமனையும்கூட எதிர்த்திடும் வலிமை!

யாரிவன் என்பதை அறிவீரா?

அட அறிந்தபின்பேனும் தெளிவீரா? 


மனிதனை மனிதன் தாழ்த்திடும் மடமை!

மாறத் தொடங்கியது இவனால் நிலைமை!

இவனின்றி திராவிட வரலாறா?

இவன் கைத்தடி ஊன்றிய காட்டாறா? 


புயலைத் தனக்குள்ளே புகுத்திய புதுமை!

முயன்று தோற்றது இவனிடம் முதுமை!

வயது இவனுக்கென்றும் பதினாறா?

இவன் வளர்த்த கூட்டமென்ன சிலநூறா? 


அறிவதில்லை சிலர் இவனது அருமை! - இவன்

பேச்சில் உயர்ந்தது பெண்களின் பெருமை!

நீ பகுத்தறிவூறும் பதநீரா? - இல்லை

விடுதலை விருச்சத்தின் அடிவேரா? 


நீ விட்டுச் சென்ற இடம் முழுதும் வெறுமை!

விலகவில்லை இன்னும் சிலரது சிறுமை!

உதவி எமக்கொன்று செய்வீரா?

உன் செருப்பை அனுப்பிவை செயல்வீரா! 


- நிலவை பாா்த்திபன் 

No comments:

Post a Comment

Comments are always welcome