Saturday, September 18, 2021

திண்ணை

 

வாசலோர வசந்த மண்டபம்! - நம்

வசிப்பிடத்தின் வரவேற்பு மண்டலம்! 


சாவகாசமாய்ச் சாய்ந்தமர

சமைக்கப்பட்ட சமதளம்!

சாமானியனோ சக்கரவர்த்தியோ

திண்ணையில் அமர்கையில் சரிசமம்! 


அன்னை மடி தரும் ஆனந்தத்தின் ஒரு பகுதியை திண்ணைகளும் தருவதுண்டு!

தென்னை மரத்தடி தென்றலின் குளுமை திண்ணையைத் தேடியும் வருவதுண்டு! 


திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றி

முன்னோர் சொல்லக் கேட்டிருப்போம்!

ஒவ்வொரு திண்ணையும்  ஒரு பள்ளியென்பதை

ஒரு சிலரே உணர்ந்திருப்போம்! 


போதி மரத்தடியில் பொய்த்துப்போகும் ஞானங்கள்கூட

வீதியோரத் திண்ணைகளில் விளையாட்டாய்க் கிடைப்பதுண்டு! 


எண்ண ஓட்டத்தில் ஏதோ குழப்பமா?

திண்ணையில் அமர்ந்து தெருவைக் கவனி!

என்ன வாழ்க்கையிது என்றோர் சலிப்பா?

தெருவில் இறங்கித் திண்ணையைக் கவனி! 


வானிருட்டிய பொழுதுகளில்

வாசலோரத் திண்ணையில் படுத்து

வானொலி கேட்ட வழக்கமுண்டா?

வாழ்க்கையின் வரப்பிரசாதம் அது! 


தெருநிறைத்துப் பெய்யும் பெருமழையை

தேநீர் சூட்டின் கதகதப்புடன் 

திண்ணையில் அமர்ந்து இரசித்ததுண்டா?

சொட்டுச் சொட்டாய் நமை நிறைக்கும் சொர்கமது! 


திண்ணையில் அமர்ந்து தினசரிகள் புறட்டும்போது கிடைக்கப்பெறும் திருப்தியை தொலைக்காட்சி செய்திகள் ஒருபோதும் தருவதில்லை! 


முன்னிரவில் நீந்தும் முழுநிலவின்

வெளிச்சமது திண்ணையைத் தாண்டி இல்லத்தினுள் வருவதில்லை! 


திண்ணையில் பேசப்படும் கதைகளைத் தாண்டி!

திண்ணைக்கென்றே திகட்டாத சில கதைகளிருப்பது தெரியும்தானே உங்களுக்கு? 


திண்ணையின் நீள அகலங்களுக்குள்

பின்னிப் பினைந்திருக்கும் சில பிரியமான நினைவுகள்! 


திண்ணையில் வளர்ந்து

திருமணத்தில் முடிந்த

காதல் கதைகள் ஏராளம்! 


திருமண பந்தம் முறிந்து

திண்ணைக்கு வந்த சண்டைகளும் ஏராளம்! 


கோடை இரவுகளில் 

கொசுக்களைப் புறந்தள்ளி

திண்ணையில் படுத்துறங்கும்

திருப்திக்கு ஈடேது! 


ஆடை காயவைக்க, அடுத்த வீட்டுக் கதைபேச 

திண்ணையைப் பயன்படுத்தத் தவறுமொரு வீடேது? 


அரசியலோ ஆன்மீகமோ

திண்ணைகளில் பேசப்பட்டவரையில்

எல்லைகள் மீறப்பட்டதில்லை!

அவை இணையவெளிக்கு இடம்பெயர்ந்தபின்

இழிவுகளுக்குப் பஞ்சமில்லை! 


பெண்பிள்ளையமர்த்திப் பேன் பார்ப்பதும்

எண்ணெய் தேய்த்த கூந்தலை

எடுப்பாகப் பின்னிப் பூ வைப்பதும் 

திண்ணையில் நிகழும் உன்னத நிகழ்வுகள்!

அவை என்றும் மறவாத சுந்தர நினைவுகள்! 


பிள்ளைக்குச் சோறூட்ட

இல்லாத பூச்சாண்டி தேடி

திண்ணைக்கு வந்து நிற்கும்

அன்னைகளைப் பார்ப்பதின்று

அரிதாகிப் போன ஒன்று! 


வீதியிறங்கி விளையாடும் குழந்தைகளை

விழிகொட்டாமல் பார்த்து ரசிக்க

திண்ணைகளின் தேவையிருந்தது

அன்றைய தாய்மார்களுக்கு! 


இன்று வீதியில் விளையாட விரும்பும் பிள்ளைகளும் இல்லை!

வீடுகள்தோறும் திண்ணைகளுமில்லை! 


அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அகோரப் பசிக்கு

திண்ணை வீடுகளைத் தின்னக் கொடுத்தோம்!

இடுக்கு சந்திலும் இரு மாடி கட்டி

வாஸ்த்துவை இடைநுழைத்து வாழ்வியல் தொலைத்தோம்! 


திட்டமிட்டு கட்டப்படும் இன்றைய இல்லங்களில்

திண்ணைகளுக்கு இடமில்லை! 


அது சரி...

அன்னை தந்தையருக்கே இடமில்லா வீட்டில்

திண்ணைகளுக்கு மட்டுமா இடமிருக்கப் போகிறது? 


- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome