Saturday, September 18, 2021

பாடும் நிலா

 

கரங்கள் நடுங்க எழுதப்படும்
இரங்கல் கவிதை இது!
சுரங்கள் ஏழும் அழுதபடி
சுனங்கும் ஒரு சூழல் இது!
பல்லாயிரம் உள்ளங்களை
புல்லரிக்க வைத்த
புல்லாங்குழல் ஒன்று
இல்லாமல் போனது இன்று!
தொள்ளாயிரம் உணர்வுகளை
தொண்டைக்குள் தேக்கி வைத்த
நல்லிதயம் ஒன்று
நமைவிட்டுச் சென்றது இன்று!
நெஞ்சாங்கூட்டின் நேர்மேலே
தேன்கூட்டைக் கொண்ட
தேகம் உன்னது!
கஞ்சா விதையில் கள் கலந்த போதை கொண்டது
உன் கானம் என்பது!
பல்லவியில் பனித்தூவி
சரணத்தால் சாமரம் வீசியவன் நீ!
மெல்லிசையின் மேடைகளை
உன் மென்குரலால் மெறுகேற்றியவன் நீ!
ஆண் குயில் என்றுனை
நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டிருந்த வேளையில்
குயிலினங்கள் கூடிப்பேசி
குருவாக ஏற்றுக்கொண்டன உன்னை!
வானம்பாடி என்றுனை நாங்கள்
வகைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் - உன்
வகுப்பறை வாசலில்
வரிசையில் நின்றுகொண்டிருந்தன வானம்பாடிகள்!
இயற்கையெனும் இளைய கன்னி
இணைத்துக்கொண்டாள் உன்னை தன்னில்!
இயலோடு இசையைப் பின்னி
இருத்திவைத்தாள் இதுவரை உன்னில்!
குழந்தையோடு சேர்த்து
குடும்பத்தையே உறங்கவைத்தது
உன் தாலாட்டு!
உன் குரலின் குளிர்ச்சியை
குத்தகைக்கு எடுத்திருந்தது நீரூற்று!
சோகங்களை சொற்களாய்ச் சோடித்து
சொக்க வைத்தது உன் குரல்!
மோகங்களை மோட்சங்களாய் மொழிபெயர்த்து
மொட்டவிழ்த்தது உன் குரல்!
உன் ஆலாபனை
ஆலோசனை சொன்னது இசைக்கு!
அந்த ஆகாயமும் அடிமையானது
உன் குரலின் ஈர்ப்பு விசைக்கு!
காதலை நீ பாடினால்
காதிலே தேன் பாயும்!
தத்துவம் நீ பாடினால்
தவிப்பினில் மனம் தோயும்!
ராகங்கள் பதினாறு - உன்
நா விட்டு வரும்போது
பாரங்கள் பலநூறு
பறந்தோடும் மனம் விட்டு!
எம் வாழ்வோடு கலந்திட்ட
வசந்தங்கள் இரண்டு....
ஒன்று உலகப் பொதுமறையாம் திருக்குறள்!
மற்றொன்று
எங்கள் உணர்வினுள் உலவிடும் உன் குரல்!
உன் குரல்வளை பொழிந்த
இசைமழை வெள்ளம்
உலகுள்ள வரையினில்
உன் பெயர் சொல்லும்!
சங்கீதம் சங்கடமின்றி
சரணடைந்தது உன்னிடம்!
அது தங்கிய இடத்திலின்று
உருவானது வெற்றிடம்!
உன் பூபாளம் கேட்டே
புலர்ந்தது காலை!
இனி புதியதோர் விடியலுக்கு
என்செய்வோம் நாளை?
பாடும் நிலா உன்னைப்
பதுக்கிக்கொண்ட மேகம் எது?
வாடும் எங்கள் நிலை மாற
வந்து மீண்டும் ஒரு பிறவி எடு!

- நீங்கா சோகத்தோடு
நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome