ஒப்பிட எதுவும் உலகினில் இல்லை
தமிழனின் பண்போடு!
உப்பிட்ட எவரையும் உள்ளத்தில் சுமப்பது
தமிழரின் பண்பாடு!
வந்தாரையெல்லாம் வாழவைத்தது
எங்களின் வரலாறு!
வாசலில் நிற்பது எதிரியென்றாலும்
மாறாது வரவேற்பு!
ஈகை குணத்தில் இமயம் தொட்டது
தமிழினம் போலேது?
ஏழு வள்ளல்கள் மட்டுமல்ல
இன்னும் ஏராளம் இங்குண்டு!
முச்சங்கம் கொண்டு மொழியை வளர்த்த இனம்
உலகினில் வேறேது?
விருந்தோம்பல் மற்றும் வீரத்தில் எங்களை
வென்றவர் கிடையாது!
திட்டம் போட்டு தமிழ் இனத்தின் பெருமையை
சிதைத்திட முடியாது!
விட்டில் பூச்சிகள் விழுவதனால் என்றும்
விளக்குகள் உடையாது!
வடமொழி திணிக்கும் கயவரின் சூழ்ச்சிக்கு
தமிழினம் படியாது!
போலிச் சேவல்கள் கூவுவதால் என்றும்
பொழுதுகள் விடியாது!
செத்துப்போன ஒரு மொழியை எங்கள்
செவிகள் ஏற்காது!
கத்துக் குட்டிகளின் கல்விக் கொள்கைகள்
கருத்தினை ஈர்க்காது!
இனிதே தொடரும் இருமொழிக் கொள்கையில்
இன்னல்கள் கிடையாது!
பிரியத்தின் பேரில் பிறமொழி கற்கும்
உரிமைக்குத் தடையேது?
வேற்று மொழிகளை ஏற்றுக்கொள்வதில்
வெறுப்புகள் நமக்கேது?
கல்வியில்கூட காவியைக் கலக்கும்
கனவுகள் பலிக்காது!
- நிலவை பார்த்திபன்
No comments:
Post a Comment
Comments are always welcome