Saturday, September 18, 2021

வயிறு ஒட்டிப்போச்சு..

வயிறு ஒட்டிப்போச்சு

வளத்த மரம் பட்டுப்போச்சு!

பொழப்பு கெட்டுப்போச்சு

பொலம்பி தொண்ட கட்டிப்போச்சு!


வாழ்க்க வத்திப்போச்சு

வறுமை இப்போ முத்திப்போச்சு!

சாமி செத்துப்போச்சு

சாவு ரொம்ப பக்கமாச்சு!


சிரிப்பு அத்துப்போச்சு

சிறுகுடலும் பொத்துப்போச்சு!

இதயம் இத்துப்போச்சு

பகலுங்கூட இருட்டிப்போச்சு!


சலங்க சத்தம் கேட்டு

சனங்க ரசிச்ச காலம் போச்சு!

சவத்தப் போல நாங்க

சாயும்படி ஆகிப்போச்சு!


கோயில் திருவிழான்னு

ஓடி அலஞ்ச காலம் போச்சு!

கோட இடி விழுந்த

கோபுரம்போல் வாழ்க்கையாச்சு!


கலைய நம்பி எங்க

கனவு எல்லாம் கலஞ்சு போச்சு!

மொடங்கிக் கெடந்து எங்க

முதுகெலும்பே வளைஞ்சுபோச்சு!


இயலும் இசையும் எங்க

இதயத்துல கலந்து போச்சு!

வாய்ப்புக்கு வழியில்லாம

வறுமக் கோடு வளந்துபோச்சு!


விசிலு சத்தமெல்லாம்

கேட்டு பல மாசமாச்சு!

உசிர சொமக்குறதே

ஒடம்புக்கிப்போ பாரமாச்சு!


பசியும் பட்டினியும்

பல நாளா பழகிப்போச்சு!

பணத்தப் பாக்குறதே

பகல் கனவா மாறிப்போச்சு!


பஞ்ச காலம்போல

நெஞ்சுக்குழி ஒடுங்கிப்போச்சு!

கஞ்சிக்கு காசில்லாம

கால் கையி மொடங்கிப்போச்சு!


வட்டிக்கு கடன வாங்கி

வயித்தக் கழுவும் நெலமையாச்சு!

சட்டி பானயெல்லாம்

வறுமையால நெறஞ்சுபோச்சு!


மேட, மேள தாளம்

மாலையெல்லாம் தூரமாச்சு!

பாட ஏறி நாங்க 

பயணம் போகும் நேரமாச்சு!


உதவி கேட்டு கேட்டு

உள்நாக்கு உலந்து போச்சு!

உமிய அவிச்சுத் தின்னு

உடம்பு இப்போ தளந்துபோச்சு!


நம்மோட போட்டி போட்டு

நரகம்கூட தோத்துப்போச்சு! - எங்க

கோலத்த பாத்து அந்த

கோவிட்டுக்கே வேத்துப்போச்சு!


வறுமையும்கூட இப்ப 

வைரசோட சேந்துகிச்சு!

எதிர்க்க தெம்பில்லாம

எங்க உசுரு சோந்துபோச்சு!


கலெக்டரு கவுன்சிலர

எதிர்பார்த்து அலுத்துப்போச்சு!

கண்ணீரத் தொடச்சு எங்க

கைரேக அழிஞ்சுபோச்சு!


- நிலவை பாா்த்திபன்

 

No comments:

Post a Comment

Comments are always welcome