Tuesday, December 02, 2025

துருப்பிடிச்ச ஊசி

 


எட்டு வயசுல
முட்டாய தட்டிவிட்டதுக்கு
கட்டிப்புரண்டு சண்டை போட்டுட்டு
மறுநாளு மதியத்துக்குள்ள
மறுபடியும் சேந்துக்கிட்டோம்

ஏழாப்பு படிக்கும்போது
எறி பந்து விளையாட்டுல
எக்குதப்பா சண்ட போட்டுட்டு
மூனு நாள் கழிச்சு
முனியப்ப அண்ணாச்சி கடையில்
ப்ரைஸ் அட்ட கிழிக்கும்போது
பிரண்ட்ஸ் ஆயிட்டோம் மறுபடியும்

பத்தாப்பு லீவுல 
கமலா ரஜினியான்னு பேசி
கைகலப்பாயி பிரிஞ்ச பிறகு
முத்தாலம்மன் கோயில் திருவிழாவுல
முருகேசு பய சேத்துவைக்க
மூனே நாள்ல சேந்துக்கிட்டோம்

காலேஜ் சேந்த புதுசுல
ஒரே புள்ளைய
ரெண்டு பேரும் 
சைட் அடிச்ச பிரச்சனையில
ஒரு மாசம் பேசாம இருந்துட்டு
சினிமா கொட்டாயில பாத்தப்ப
சிரிச்சுப் பேசி கூடிக்கிட்டோம் 

இப்ப வளந்து 
புள்ள குட்டின்னு ஆனபிறகு
வருசக் கணக்கா
பேச்சு வார்த்த இல்ல

வாட்சப்புல போட்ட
வக்கத்த ஒரு
அரசியல் சண்டையால....

அதனாலதான் சொல்றேன்.....

நட்புல வரும் சண்ட வெறும்
கண்ணுல விழும் தூசி
எப்ப அது விழுந்தாலும்
எடுக்குறது ஈசி

இந்த உருப்படாத அரசியல்
ஒரு துருப்பிடிச்ச ஊசி
அது நட்ப குத்தி சாகடிக்கும்
நண்பா நீயும் யோசி

இளமைக்கால நட்பு எல்லாம்
இயற்கையோட ஆசி
அத இல்லாம ஆக்கணுமா
அரசியல பேசி?

அரசியலும் தேவைதான்
அத ஆழமா நீ வாசி
கொள்கை வேற நட்பு வேற
குழப்பிக்காம நேசி!


  - நிலவை பார்த்திபன்

இதங்கள்

 


நீண்ட இரைச்சலுக்குப் பின்பான
நிசப்த நிமிடம்

காணாமல் போய் கிடைத்த
காதலியின் கடிதம்

வாசிக்கையில் சிலிர்க்கும்
வர்க்கப் புரட்சி ஒன்றின் சரிதம்

காயங்கள் ஆற்றிக் கடக்கும்
காலத்தின் துரிதம்

தன்னலங்களுக்கு மத்தியில் 
தப்பிப் பிழைத்திருக்கும் மனிதம்

சிராய்ப்புகள் 
சிலவற்றிற்குப் பின்பான
சின்னதொரு மகுடம்

ஆங்காங்கே வெளிப்படும்
அன்பெனும் புனிதம் 

என இடையிடையே கைகூடும்
சில இதங்களை நம்பி

இன்னமும் நீண்டுகொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

இடம் வலம் 
இயந்திரமயமாகிவிட்டபோதிலும்
சில நிராசைகள்
நிரந்தரமாகிவிட்டபோதிலும்.....


 - நிலவை பார்த்திபன்

 - 

Sunday, November 09, 2025

அறுந்த வாலை ஆட்டாதீர்

 


2018 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர மாலிக் என்பவரது நூலை மேற்கோள் காட்டி "தமிழை ஆண்டாள்" என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பேசியத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையும் அதன்பிறகான சனாதனிகளின் மிரட்டல்களையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை....


வேசிமகன் 

என்கிறான் ஒருவன்

வெட்டுவேன் நாவை 

என்கிறான் மற்றொருவன்!


உண்ணா நோன்பிருக்கிறது

ஒரு கூட்டம்!

கொன்றாலும் தவறில்லையென்கிறது

இன்னொரு கூட்டம்!


வெட்டிவீரம் பேசும்

முட்டாள் குரங்குகளே

வெட்டுவது இருக்கட்டும் - முதலில்

தொட்டுத்தான் பாருங்களேன்?


மேற்கோள் காட்டியதற்கே

போர்கோலம் பூண்டு நிற்கும்

பூனூல் புலிகளே!

ஆரியத்து நரிகளே!


உன் கோத்திரன் இதை

உரைத்தபோது

போர்த்திப் படுத்துவிட்டு

சூத்திரன் இவரென்பதால்

ஆத்திரம் கொள்வீரோ?


அர்ச்சகனென்ற பெயரில்

ஆலயக் கருவறையுள்

ஆரேழு பெண்டிருடன்

அந்தரங்க ஆராதனை

அம்பியொருவன் செய்தானே...


அன்றும் இதுபோல் 

குதித்தீரா? - அன்றி

அதையும் மனதினுள் 

இரசித்தீரா?


சங்கரராமன் என்பவரை

சங்கறுத்துச் சாய்த்தபோது

எங்கு சென்று ஒளிந்தீர்கள்?

என்ன செய்து கிழித்தீர்கள்?


கோவிலென்றும் பாராமல்

கொன்று போட்ட அந்த 

கொடுஞ்செயலை

கோமிய விரும்பிகள்

எதிர்க்கவில்லை

கோபம் கொண்டு அன்று

கொதிக்கவில்லை! 


வாழ்வாதாரப் போராட்டங்கள்

வருடமெல்லாம் நிகழ்ந்தாலும்

வாய்திறந்த வழக்கமில்லை

வருந்தக்கூட மனமில்லை


இன்றோ

ஆண்டாளென்று வந்தவுடன்

அலறியடித்து அனைவருமே

கூண்டோடு வந்து குரலெலுப்பும்

குள்ளநரித்தனம் இதுவன்றோ!


சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் அவள் 

பாடிக்களித்த திருமொழியை

தேடியொருமுறை படியுங்கள்

பின்பு நீலிக்கண்ணீர் வடியுங்கள்!


பெய்யாத மழைத்துளி

மண் சேர்வதேது?

செய்யாத தவறுக்கு

மன்னிப்பு எதற்கு?


சிரத்திலிருந்து  பிறந்ததால்

சிறந்தவர் நீவிரென்றும்

நிறத்தினால் கருத்தவரை

வேறென்று வெறுத்தமைக்கும் 

நீவிரல்லவோ கோரவேண்டும்

நித்தமும் மன்னிப்பு?


முரட்டுத் தமிழினத்தை 

மிரட்டிப் பணியவைக்க 

வரட்டுக் கனவு காணும்  

குருட்டுப் பூனைகளை 

விரட்டி அடித்திடுவோம்!

அடக்கி ஒடுக்கிடுவோம்!


சண்டித்தனம் செய்துபார்க்க 

இது சாமியார் மடமில்லை!

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு 

இனியும் இங்கு இடமில்லை!


மனுதர்மச் சேட்டைகளை 

மறுபடி இங்கு காட்டாதீர்!

மறத்தமிழன் மண்ணில் நின்று 

அறுந்த வாலை ஆட்டாதீர்! 



                          - நிலவை பார்த்திபன்

Saturday, November 08, 2025

எடு செருப்ப


 

சாணி பீ திங்கும்
சாதிப் பன்னிகளா
சந்தோசமாடா இப்ப?
தண்ணித் தொட்டி
என்ன சாக்கடையா
நீ பேண்ட கருமத்த நெப்ப?
மொத்த ரத்தமும்
கொதிக்குதுடா உங்க
மொகத்துல காரி துப்ப!
மலத்தக் காட்டிலும்
நாறுதடா உங்க
மனசுல உள்ள குப்ப!
ஆண்ட பரம்பர
அசிங்கங்களா நீங்க
திருந்தப்போறது எப்ப?
மாண்டு மண்ணா
நீ போனாக்கூட
மறக்கமாட்டோம் உன் தப்ப!
சாமி கும்புட
கோயிலு வந்தா
சாதியச் சொல்லி தடுப்ப!
காப்பி கேட்டு
உன் கடைக்கு வந்தா
தனியொரு குவளையில் குடுப்ப!
சாமி வந்ததா
சாக்கு சொல்லி உன்
வன்மத்த வாந்தி எடுப்ப!
உன் நாத்தத்த மறைக்க
நாளொரு விதமா
நல்லவன் போல நடிப்ப!
விலகி வேணான்னு
போனா அவங்க
விலாவில் ஏறி மிதிப்ப!
என்னைக்குத்தான்டா மத்த சாதியையும்
மனுசப் பிறவியா மதிப்ப?
மெல்ல தலதூக்கி
எதுத்து கேட்டா
மேலயும் கீழயும் குதிப்ப!
சாகுற வரைக்கும் சங்கடப்படாம
சாதிச் சாக்கடையில் குளிப்ப!
எச்ச பய நீன்னு
தெரிஞ்சு போச்சுடா
என்ன செஞ்சு
இனி கிழிப்ப?
நாத்தம் புடிச்ச உன்
சாதித் திமிர வச்சு
நாக்க மட்டுந்தான் வழிப்ப!
இனியொரு பயலும்
அசைக்க முடியாது
இந்த மண்ணில்
சிலர் இருப்ப!
வேற மண்ணுல
போயி முடிஞ்சா
வேக வை
உன்னோட பருப்ப!
தீரத்தோட நின்னு போராடி இனி
வேரறுப்போம் உங்க வெறுப்ப!
எப்பவும்போல ஏறி மிதிச்சா
எடுப்போம் இனிமே செருப்ப!

- நிலவை பாா்த்திபன்

என்றென்றும் தமிழ்நாடு


 

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இங்கு தேள் கொட்டுதே
சிலர் காதினிலே!
எங்கள் தாய் தமிழ்
பூமியின் மீதினிலே
சில வந்தேரி
நாய் கூட்டம் வாலாட்டுதே!
யார் வைத்த பெயரை
யாரடா மாற்ற?
வக்கற்றுப் போனோமோ
நீ பெயர் சூட்ட?
எம் மண்ணில் நீ வந்து
உன் கொடியேற்ற
பேடிகளா நாங்கள்
வேடிக்கை பார்க்க?
ஆளாத உன் பெயர் ஆளுநரா?
அற்பனே நீயென்ன ஆண்டவனா?
ஆரியன் என்றாலே ஆணவமா?
எம்மினம் என்றாலே ஏளனமா?
தமிழ்நாடோ தமிழகமோ
நீ யார் அதைச் சொல்ல?
உன் தலைக்கனத்தை தரையிறக்க
இது உன் நிலம் அல்ல!
அனுமதியோம் இனியிங்கு
நீ கிடந்து துள்ள!
தரணியிலே எவருமில்லை
தமிழரெமை வெல்ல!
எழுவர் விடுதலைக்கு
எமனாக நின்றாய்!
இணையச் சூதாட்டத்தை
இருக்கட்டும் என்றாய்!
தமிழர் வரலாற்றினைத்
திரித்தாயே நன்றாய்!
நல்ல குடிகளின்
நம்பிக்கை கொன்றாய்!
என்றென்றும் தமிழ்நாடு
என்றே இனி உரைப்போம்!
எவரேனும் இடர் செய்தால்
ஏறி நெஞ்சில் உதைப்போம்!
வந்தேரிகள் வாய்க்கொழுப்பை
வளராது தடுப்போம்!
குள்ளநரிக் கூட்டமதன்
குரல்வளையை உடைப்போம்!

- நிலவை பாா்த்திபன்

கவிதை நேரங்கள்


 

கவிதையென நான்
எழுதும் எதையும்
கடுகளவும் இரசிப்பதில்லை
அவள்!
அவளுக்கான என் பொழுதுகளை
அவை அபகரித்துக்கொள்வதாக
ஆத்திரப்படுகிறாள்!
ஆனால்
இனிக்கும் தேநீர்
பொழுதுகளின்போதான
இதமான உரையாடல்கள்!
காலைச் சிற்றுண்டியின்போதான
காரசார விவாதங்கள்!
அலுவல் இடைவெளிகளின்போதான
அலைபேசி விசாரிப்புகள்!
வீடு திரும்பியது முதல்
விளக்கணைக்கும்வரை
விரிவாக அலசப்படும்
அன்றைய நிகழ்வுகள்
என அவளிடம்
களவுபோகும் அனைத்தும்
என் கவிதைக்கான நேரங்கள் என்பதை
கடைசிவரை சொல்லப்போவதில்லை அவளிடம்!

- நிலவை பாா்த்திபன்

பழகிருச்சு தம்பி


 

அவ்வப்போது நான் செல்ல நேரும்
ஆறு தளங்கள் கொண்ட
வணிக வளாகம் அது!
அதன் மின்தூக்கியை
இயக்கும் பொறுப்பில்
மீசை நரைத்த அந்த பெரியவரை
அநேக நேரங்களில் காண்கிறேன்!
தளங்களைக் குறிக்கும் பொத்தான்களின்
கீழமைந்த தாழ்வான ஒரு
முக்காலிதான் அவருக்கான இடம்!
கதவு திறந்து மூடு்ம் இடைவெளியில்
புகுந்து வரும் காற்று மட்டுமே
புதுப்பித்துக் கொண்டிருந்தது
அவரையும் அவ்வறையையும்!
சாளரமற்ற ஒடுங்கிய அறையில்
சலனமற்ற முகத்துடன்
போவோர் வருவோருக்காக
பொத்தான்களை அழுத்துவதொன்றே
அவரது பணி!
தகரக் கதவுகள் திறந்து மூடும்
சத்தம் மட்டுமே
அவரது தனிமையின் இடைவெளிகளைத்
தவணை முறையில் நிரப்பிக்கொண்டிருந்தன!
நடுநடுவே தலைகாட்டும்
மனிதர்களின் நடமாட்டம்
தான் நரகத்தில் இல்லையெனும்
நம்பிக்கையைத்
தந்திருக்கக்கூடும் அவருக்கு!
மூச்சை முட்டும் சிறிய அறை
இயந்திரம் கொண்டியங்கும்
அந்த இரும்புச் சிறை!
காலை முதல் மாலை வரை
மேலும் கீழுமாய் அதில் உழலும் நிலை!
எண்களை அவர் அழுத்தும் விதத்தில்
அவரது மன அழுத்தத்தின் தீவிரத்தை
மதிப்பீடு செய்ய முடிந்தது!
ஆயினும் கூட
எவ்வளவு நெரிசலிலும் அவர்
எரிச்சலடைந்து நான் பார்த்ததாக
எப்போதும் நினைவில்லை எனக்கு!
உங்களில் சிலரைப் போலவே
மேலோட்டப் பார்வையில் இது
கடினமற்ற பணியாகத் தோன்றிய எனக்கு
அம்முக்காலியில் எனை
இருத்திவைத்துக் கற்பனை செய்ததில்
மூன்றே நிமிடங்களில்
முகம் வியர்த்துப்போனது!
அளவு கடந்த பொறுமை இருந்தாலொழிய
அவ்வளவு எளிதன்று இப்பணி
என்பதை ஆழமாக உணரமுடிந்தது!
நானும் அவரும் மட்டும்
பயணப்பட்ட நண்பகல் தருணமொன்றில்
மெதுவாகக் கேட்டேன் அவரிடம்
"ஐயா இது கடினமாக இல்லையா?"
பற்கள் தெரியாமல் சிரித்து
ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்
"பழகிருச்சு தம்பி"
அந்த விரக்திச் சிரிப்பிலிருந்து
விழுந்து சிதறிக்கொண்டிருந்தது
அவர் விளக்க விரும்பாத
சில விசும்பல்கள்!
இப்படித்தான் பழகிக்கொண்டிருக்கிறது
பலருக்கும் இந்த வாழ்க்கை
பாரங்களுக்கும் பாதிப்புகளுக்கும்
மத்தியில்
வேறேதும் வழிகளின்றி!
இப்போதெல்லாம்
சிறு தடங்கல்களிலும்
சில நொடி தாமதங்களிலும்
பொறுமையிழந்து எரிச்சலுறும்போது
நினைவில் கொள்ளத் தவறுவதில்லை
அம்மின்தூக்கியையும்
அம்மனிதரின் புன்சிரிப்பையும்!
அதனினும் முக்கியமாய்
"பழகிருச்சு தம்பி" என்ற அந்த
பக்குவப்பட்ட வார்த்தைகளையும்!

- நிலவை பாா்த்திபன்