நீண்ட இரைச்சலுக்குப் பின்பான
நிசப்த நிமிடம்
காணாமல் போய் கிடைத்த
காதலியின் கடிதம்
வாசிக்கையில் சிலிர்க்கும்
வர்க்கப் புரட்சி ஒன்றின் சரிதம்
காயங்கள் ஆற்றிக் கடக்கும்
காலத்தின் துரிதம்
தன்னலங்களுக்கு மத்தியில்
தப்பிப் பிழைத்திருக்கும் மனிதம்
சிராய்ப்புகள்
சிலவற்றிற்குப் பின்பான
சின்னதொரு மகுடம்
ஆங்காங்கே வெளிப்படும்
அன்பெனும் புனிதம்
என இடையிடையே கைகூடும்
சில இதங்களை நம்பி
இன்னமும் நீண்டுகொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை
இடம் வலம்
இயந்திரமயமாகிவிட்டபோதிலும்
சில நிராசைகள்
நிரந்தரமாகிவிட்டபோதிலும்.....
- நிலவை பார்த்திபன்
-
No comments:
Post a Comment
Comments are always welcome