Tuesday, December 02, 2025

துருப்பிடிச்ச ஊசி

 


எட்டு வயசுல
முட்டாய தட்டிவிட்டதுக்கு
கட்டிப்புரண்டு சண்டை போட்டுட்டு
மறுநாளு மதியத்துக்குள்ள
மறுபடியும் சேந்துக்கிட்டோம்

ஏழாப்பு படிக்கும்போது
எறி பந்து விளையாட்டுல
எக்குதப்பா சண்ட போட்டுட்டு
மூனு நாள் கழிச்சு
முனியப்ப அண்ணாச்சி கடையில்
ப்ரைஸ் அட்ட கிழிக்கும்போது
பிரண்ட்ஸ் ஆயிட்டோம் மறுபடியும்

பத்தாப்பு லீவுல 
கமலா ரஜினியான்னு பேசி
கைகலப்பாயி பிரிஞ்ச பிறகு
முத்தாலம்மன் கோயில் திருவிழாவுல
முருகேசு பய சேத்துவைக்க
மூனே நாள்ல சேந்துக்கிட்டோம்

காலேஜ் சேந்த புதுசுல
ஒரே புள்ளைய
ரெண்டு பேரும் 
சைட் அடிச்ச பிரச்சனையில
ஒரு மாசம் பேசாம இருந்துட்டு
சினிமா கொட்டாயில பாத்தப்ப
சிரிச்சுப் பேசி கூடிக்கிட்டோம் 

இப்ப வளந்து 
புள்ள குட்டின்னு ஆனபிறகு
வருசக் கணக்கா
பேச்சு வார்த்த இல்ல

வாட்சப்புல போட்ட
வக்கத்த ஒரு
அரசியல் சண்டையால....

அதனாலதான் சொல்றேன்.....

நட்புல வரும் சண்ட வெறும்
கண்ணுல விழும் தூசி
எப்ப அது விழுந்தாலும்
எடுக்குறது ஈசி

இந்த உருப்படாத அரசியல்
ஒரு துருப்பிடிச்ச ஊசி
அது நட்ப குத்தி சாகடிக்கும்
நண்பா நீயும் யோசி

இளமைக்கால நட்பு எல்லாம்
இயற்கையோட ஆசி
அத இல்லாம ஆக்கணுமா
அரசியல பேசி?

அரசியலும் தேவைதான்
அத ஆழமா நீ வாசி
கொள்கை வேற நட்பு வேற
குழப்பிக்காம நேசி!


  - நிலவை பார்த்திபன்

இதங்கள்

 


நீண்ட இரைச்சலுக்குப் பின்பான
நிசப்த நிமிடம்

காணாமல் போய் கிடைத்த
காதலியின் கடிதம்

வாசிக்கையில் சிலிர்க்கும்
வர்க்கப் புரட்சி ஒன்றின் சரிதம்

காயங்கள் ஆற்றிக் கடக்கும்
காலத்தின் துரிதம்

தன்னலங்களுக்கு மத்தியில் 
தப்பிப் பிழைத்திருக்கும் மனிதம்

சிராய்ப்புகள் 
சிலவற்றிற்குப் பின்பான
சின்னதொரு மகுடம்

ஆங்காங்கே வெளிப்படும்
அன்பெனும் புனிதம் 

என இடையிடையே கைகூடும்
சில இதங்களை நம்பி

இன்னமும் நீண்டுகொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

இடம் வலம் 
இயந்திரமயமாகிவிட்டபோதிலும்
சில நிராசைகள்
நிரந்தரமாகிவிட்டபோதிலும்.....


 - நிலவை பார்த்திபன்

 -